சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை அது ஊக்குவிக்கும் என்றும், தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு மூன்றாவது நாளாக இன்று நடந்தது.
அப்போது வாதிட்ட சுப்பிரமணிய சுவாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தளத்தை கொச்சினில் அமைப்பதற்கும், இலங்கையில் அவர்கள் வலுவாக உள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து கேரளத்தில் உள்ள கொச்சினை நேரடியாக அணுகுவதற்கும் சேது சமுத்திரக் கால்வாய் உதவும் என்றார்.
சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதாக அமையும் என்றும், அதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கடலோர காவற்படையும், கப்பற்படைத் தளபதியும் எச்சரித்துள்ளதை சுப்பிரமணிய சுவாமி சுட்டிக்காட்டினார்.
ராமர் பாலத்திற்குப் பூஜை செய்வதற்காக நடுக்கடலுக்குச் செல்பவர்கள் யார்? என்று நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி, "நாம் சூரியனைக் கும்பிடுகிறோம். ஆனால் நாம் சூரியனிற்குச் செல்வதில்லை" என்றார்.
(இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது, வருடத்திற்கு ஒருமுறை தான் கடலிற்குச் சென்று ராமர் பாலத்தை வழிபட்டு வருவதாக சுப்பிரமணிய சுவாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
காளைகள் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாக் குற்றச்சாற்று எழுந்த ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஜல்லிக்கட்டு என்பது மக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் என்று தமிழக அரசு எடுத்த நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய சுப்பிரமணிய சுவாமி, தற்போதுள்ள வழக்கு உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம்; இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசும் தமிழகத்தில் உள்ள கருணாநிதி அரசும் மறுக்கின்றன என்றார்.
ராமர் பாலத்தை எந்தவகையில் தொட்டாலும் அது 80 கோடி இந்துக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 ஆவது பிரிவு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றார் அவர்.
தற்போதுள்ள திட்டப்படி சேது சமுத்திரக் கால்வாய் அமைந்தால் அது எளிதான கப்பல் போக்குவரத்திற்கு உதவியாக இருக்காது என்ற வல்லுநர்களின் கருத்தை அரசு நிராகரிக்கிறது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
சுப்பிரமணிய சுவாமி நாளையும் தொடர்ந்து வாதாட உள்ளார்.