இந்தியாவில் உணவு தானியங்களின் தேவை அதிகரிப்பதுதான் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது கொடுமையான நகைச்சுவை என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
இதுகுறித்துத் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பெருமளவிலான வேளாண் நிலங்கள் வணிகத் தேவைகளுக்கும் உயிரி எரிபொருள் தயாரிப்பிற்கும் ஏற்றவகையில் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுவதுதான் உலகளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்றார்.
அமெரிக்காவின் கொள்கைகளும்தான் உணவு தானியப் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்று குற்றம்சாற்றிய அமைச்சர் அந்தோணி, விமர்சிப்பவர்கள் தங்கள் நிலங்களை வேளாண்மை தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்தாதவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் தவறுகளைக் கண்டிப்பாகத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.