வைஷ்ணவி தேவி கோயில் அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் காவல்படை காவலர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் இரண்டு காவலர்களைச் சுட்டுக் காயப்படுத்தியதுடன் தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட வீரேந்தர் சிங் என்ற அந்தக் காவலர் சம்பவத்திற்கு முன்பு தனது மேலதிகாரியான ஆய்வாளர் ஸ்நூப், காவலர் பர்வீன் குமார் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ஸ்நூப், பிரவீன் குமார் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் காவல்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூடுதல் ஐ.ஜி. ஆலுக் புரி கூறினார்.
கட்ராவில் இருந்து வைஷ்ணவி தேவி கோயில் வரை 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 600 மத்திய ரிசர்வ் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஜம்மு- காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 19 க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும், மத்திய ரிசர்வ் காவல்படையினரும் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.