இந்திய- சீன எல்லையில் உள்ள அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வருகிற 6ஆம் தேதி செல்லவுள்ளார்.
அமைச்சர் ஏ.கே.அந்தோணியுடன் ராணுவத் தலைமைத் தளபதி தீபக் குமார், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் தவாங் செல்கின்றனர். இவர்களை அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கண்டு வரவேற்கிறார்.
இந்தப் பயணம் முற்றிலும் பாதுகாப்பு தொடர்பானது என்று அருணாசலப் பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர். சாப்பர் பகுதி முதல் டெங்கா பகுதி வரை உள்ள முக்கிய ராணுவ முகாம்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அந்தோணி செல்லவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
அருணாச்சல பிரதேச ஆளுநர் ஜெ.ஜெ.சிங் கடந்த வாரம் தவாங் பகுதிக்கு வந்து இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய- சீன எல்லைப் பிரச்சனையில் தவாங் முக்கியப்பங்கு வகிக்கிறது. இப்பகுதியை தங்களுடையது என்று அறிவித்தால் அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அங்கீகரிக்கத் தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஆனால் இதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.