''விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால்,ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டின் 2-ம் நாளான நேற்று , இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறுகையில், "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 4 முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்துவதோடு, மாநில அரசுகளுக்கு வழங்கும் இதற்கான ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது. சமையல் எண்ணெய், சர்க்கரை, தானியங்கள் உள்பட 15 வகையான அத்தியாவசியப் பொருள்களை பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் கொண்டு வர வேண்டும்.
ஊக வணிகம் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே ஊக வணிகத்தில் இருந்து அரிசி, கோதுமை, தானியங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ள 25 வகையான அத்தியாவசிய உணவுப் பொருள்களின் ஊக வணிகத்துக்குத் தடைவிதிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையைக் குறைக்க, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களுக்கு விலை அடிப்படையில் சுங்கம் மற்றும் கலால் வரியை விதிக்காமல், அளவைப் பொறுத்து வரி விதிக்க வேண்டும்.
இக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், இதே கருத்துடைய மற்ற கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்" என்றார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏப்.17, 18-ம் தேதிகளில் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.