பூடான் நாடளுமன்ற தேர்தலின் பாதுகாப்பு கருதி இந்திய-பூடான் எல்லைப் பகுதிகள் 36 மணிநேரம் மூடப்பட உள்ளது.
பூடானில் வரும் 24-ம் தேதி நடக்க உள்ள பொது தேர்தலின் மூலம் 75 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலையொட்டி, பூடான்- அஸ்ஸாம் எல்லை வரும் 23-ம் தேதி மாலை 6 மணிமுதல் 25-ம் தேதி காலை 6.00 மணிவரை மூடப்படுகிறது. பூடான் நாட்டில் தேர்தல் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பூடான்- மேற்கு வங்க எல்லையும் 22-ம் தேதி இரவு 8 மணி முதல் 25-ம் தேதி காலை 6.00 மணிவரை மூடப்பட உள்ளது.
அதன்படி, 'பூடானில் இருந்து மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்குமான போக்குவரத்து 25-ம் தேதி காலை 6 மணிக்கே துவங்கும்' என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறித்தப்பட்டுள்ளது. பூடான் அரசு கூடுதல் படைகளை இப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளது. இந்திய அரசும் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோர் நுழையாமல் தடுக்க கூடுதல் காவல் படையை நிறுத்த உள்ளது.