கேரளாவின் தாலஸ்சேரி பகுதியில் கடந்த 4 நாட்களாக நடந்துவரும் அரசியல் கலவரத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 5-ம் தேதி முதல் நடந்துவரும் இந்த வன்முறையால் ஐந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இல்லத்துதாழேவில் உள்ள பா.ஜ.க. தொண்டர் சுரேந்திரன் (61) வீட்டில் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். தற்போது கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்' என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு நடந்த வன்முறையில் மற்றொரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஜீவன் (30), மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வியஜயன் (52), அவரது மகள் ரம்யா (21) ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, தாலஸ்சேரி நகராட்சி துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சி தலைவருமான முகமது அலி வீட்டில் நேற்று இரவு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
மேலும் இன்று தாலஸ்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த தாக்குதலில் இரண்டு மார்க்சிஸ்ட் தொண்டர்கள் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினர் கூறுகையில், "சமீர் (30), ரியாஸ் (25) ஆகியோர் மருத்துவமனையில் அபாயகரமான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பா.ஜ.க.வினர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
கோலஸ்சீரி, கவுபகம், தார்மோதம், வடகும்பத், பவசிமுக்கு, கதிரூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக, தொடர்ந்து வரும் வன்முறைகளை நிறுத்தி, அமைதி ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் இஷ்கிதா ராய் இருதரப்பு மாவட்ட தலைவர்கள் மத்தியில் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், இந்த கலவரச் சம்பவங்கள் தொடர்பாக, கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் தாலஸ்சேரி பகுதியில் இன்று பார்வையிட திட்டமிட்டுள்ளார்.