மாணவர்களின் சுமையை குறைக்க 10,12 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று மக்களவை உறுப்பினர்கள் கூறினார்கள்.
மக்களவையில் நேற்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சந்தீப் தீட்ஷித் பேசும் போது, 10, 12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எழுத மிகுந்த சிரமப்படுகின்றனர். மத்திய பாட திட்டங்கள் கடினமாக உள்ளன. தேர்வை எதிர்நோக்கி மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். தேர்வுகளில் வெற்றி பெறா விட்டால் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.
மாணவர்கள் எல்லா நேரமும் தேர்வுகளில் கவனம் செலுத்துதால், விளையாட்டு, மற்றவைகளுக்கு குறைந்த நேரமே ஒதுக்க முடிகின்றது. இதனால் அவர்கள் தங்களின் குழந்தை பருவத்தை இழக்கின்றனர்.
எனவே மாணவர்களின் பாட சுமையை குறைக்க பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் படி என்.சி.இ.ஆர்.டி யிடம் கூறவேண்டும் என்று கூறினார்.
சந்திப் தீட்ஷித் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி, எனது பேத்தி 10 ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருக்கும் பதட்டம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், சந்திப் தீட்ஷித்தின் கருத்தை சபையின் எல்லா உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்கின்றனர் என்றார்.