குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் உரையுடன் நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.
நாளை 26ஆம் தேதி ரயில்வே நிதிநிலை அறிக்கையும், 29-ந் தேதி பொது நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்.
இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் கலந்து கொண்டு உரையாற்றுவார்.'
2008-09-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை 26-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அப்போது புதிய ரெயில் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார்.
ரெயில்வே நிதிநிலை அறிக்கை மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்று லாலு பிரசாத் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
2008-09-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை (வரவு-செலவு திட்டம்) 29-ந் தேதி தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். அப்போது புதிய வரிகள், வரிச்சலுகைள் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார்.
இந்த ஆண்டில் சில மாநில சட்டசபைகளுக்கும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நிதிநிலை அறிக்கை கடுமையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தி உள்ளார். மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளும் நிதிநிலை அறிக்கை தொடர்பான தங்கள் யோசனைகளை மத்திய அரசிடம் தெரிவித்து இருக்கின்றன. கடந்த சில நாட்களாக நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியில் ப.சிதம்பரம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.