சிமெண்ட் தேவையான அளவிற்கு கிடைக்காமல், விலை அதிகரித்தால் அதிகளவு இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
இந்தியாவில் உள் கட்டமைப்பு பணி, பல மாடி அடுக்கு கட்டிடங்கள் கட்டும் பணி முழு விச்சில் நடந்து வருகிறது. இத்துடன் வங்கிகள் சுலபமாக கடன் கொடுப்பதால் வீடு கட்டும் பணியும் அதிகளவு நடந்து வருகிறது. இதனால் சிமெண்ட் விலை கடந்த ஒரு வருடமாக அதிகரித்து உள்ளது. கடந்த வருடம் 50 கிலோ சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 க்கும் குறைவாக இருந்தது. தற்போது ரூ.240 என்ற அளவில் உள்ளது. சிமெண்ட் விலை கடந்த ஒரு வருடத்தில் 10.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதன் விலையை குறைக்க மத்திய அரசு உற்பத்தி வரி விகிதங்களை மாற்றி அமைத்தது. இதன் படி முன்பு எல்லா வகை சிமெண்ட் உற்பத்தி வரி ஒரே மாதிரியாக இருந்தது. இதை தரத்திற்கு தகுந்தால் போல் மாற்றி அமைத்தது. அத்ததுடன் சிமெண்ட் இறக்குமதி வரியையும் முழுவதுமாக நீக்கியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் எந்த பலனையும் தரவில்லலை.
தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் சிமெண்ட் தாரளமாக கிடைக்க்வும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்த முயற்சிக்கு மத்திய அரசின் அதிகாரவர்கமே சில தடைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட் இந்திய தர நிர்ணயத்தில் இல்லை. இவர்கள் பாகிஸ்தான் சிமெண்ட் ஆலைகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரிகள் பாகிஸ்தான் உட்பட, சிமெண்ட் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வை மேற் கொண்டு அணுமதி கொடுப்பார்கள் போன்ற காரணங்களை கூறி, சிமெண்ட் இறக்குமதிக்கு தடை, தாமதத்தை ஏற்படுத்தினர்.
அப்போது தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசை, குறிப்பாக வர்த்தக அமைச்சரை நேரடியாக தொடர்பு கொண்டு சிமெண்ட் இறக்குமதிக்கான தடைக்கற்களை நீக்கும்படி வலியுறுத்தினார். இதனால் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்கியது.
இதற்கு பின் பாகிஸ்தானில் இருந்து 10 லட்சம் டன் சிமெண்ட் இறக்குமதி செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. அத்துடன் மேலும் தேவைப்படும் சிமெண்ட்டை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்டல் அண்ட் மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் இறக்குமதி செய்ய முடிவெடுத்தது.
இந்நிலையில் சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக முதலமைச்சர் கருணாநிதி சிமெண்ட் விலை ஆலைகள் விலையை குறைக்காவிட்டால், சிமெண்ட் ஆலைகள் அரசு ஏற்றுக் கொள்ள தயங்காது என உறுதியாக அறிவித்தார்.
இதை அடுத்து சிமெண்ட் ஆலை அதிபர்கள் சார்பாக இந்தியா சிமெண்ட் ஆலையின் செயல் இயக்குநர் என்.ஸ்ரீனிவாசன் முதலமைச்சர் கருணாநிதியை சென்ற 7 ந் தேதி சந்தித்தார். அப்போது சிமெண்ட் விலை குறைப்பது தொடர்பான முடிவை 10 ந் தேதி தெரிவிப்பதாக முதலமைச்சரிடம், ஸ்ரீனிவாசன் கூறினார்.
இதன் படி நேற்று (9 ந் தேதி) 50 கிலோ உள்ள சிமெண்ட் மூட்டை ரூ.200 என்ற விலையில் வழங்குவதாக சிமெண்ட் ஆலைகள் முதல்வரிடம் தெரிவித்தன. இதன் படி சலுகை விலையில் மாதத்திற்கு 20 லட்சம் மூட்டை சிமெண்ட் அரசு குறிப்பிடும் நபர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
அத்துடன் பல்வேறு அரசின் திட்டங்களுக்கும், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷனுக்கும் வழங்கும் சிமெண்ட் விலையை குறைக்கவும் சம்மதித்தன. இதன் படி 50 கிலோ மூட்டை ரூ.220க்கு அரசின் திட்டங்களுக்காக வழங்கப்படும். முன்பு 1 சிமெண்ட் மூட்டை ரூ.230 என்ற விலையில் வழங்கி வந்தன.
அரசின் திட்டங்களுக்காக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷனுக்கு மாதத்திற்கு 14 லட்சம் மூட்டைகள் வழங்க சம்மதம் தெரிவித்தன.
இந்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் சிமென்ட் தட்டுப்பாட்டு ஏற்படுவதை தவிர்க்க அரசு இறக்குமதி செய்ய தயங்காது என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இவ்வாறு நேற்று டில்லியில் நடைபெற்று வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த கமல்நாத் கூறினார்.
அவர் மேலும் கூறும் போது, சிமெண்ட் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க ஒரே வழி, சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்க் வேண்டும். புதிய சிமெண்ட் ஆலைகள் உற்பத்தியை தொடங்கும் போது, தற்போதுள்ள ஆலைகளின் விரிவாக்கம் முடியும் போது உற்பத்தி அதிகரிக்கும். தற்போது அதிகளவு கட்டுமான பணிகள் நடப்பதால் தான் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம், தேவைக்கும்-உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி அல்ல.
சிமெண்ட் ஆலைகள் கூட்டணி அமைத்துக் கொண்டு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. இதன் மூலம் விலையை உயர்த்துகின்றன என்ற குற்றச்சாட்டு பகிரங்கமாக பல தரப்பிலும் இருந்தும் கூறப்பட்டது.
இதனை உறுதி செய்யும் விதமாக மொனாபலிஸ் அண்ட் ரெஸ்டிக்டிவ் டிரேட் பிராக்டிஸ் கமிஷன் என்ற ஏகபோக வர்த்தக மற்றும் கட்டுப்பாட்டு கமிஷன் சிமெண்ட் ஆலைகள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை உயர்த்துகின்றன என குற்றம் சாட்டியது.