நமது நாடு முழுவதும் 50 மெகாவாட் திறனுடைய சூரிய மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டம் 11 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நடைமுறைக்கு வரும் என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இத்துறையின் அமைச்சர் விலாஸ் முத்தம்வர், சூரிய சக்தியால் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு ஏற்றவாறு கிலோவாட்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரையில் நிதியுதவி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளர்ச்சி முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய தனியார் துறைகள் ஒப்புக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.