பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன் கொலை வழக்கில், அவரின் சகோதரர் பிரவீன் மகாஜன் குற்றவாளி என்று மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரவீனுக்கு எதிராக திட்டமிட்ட கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பிரவீன் மகாஜன் பிரமோத்தைக் கொலை செய்வதற்கு முன்பு திட்டமிட்டுள்ளார் என்ற குற்றச்சாற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இது திட்டமிட்ட கொலை என்பதை பிரமோத்திற்கு பிரவீன் அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள் நிரூபிக்கின்றன என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி மத்திய மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், சொத்து விவகாரம் குறித்து நடந்த வாக்குவாதத்தின் இறுதியில், பிரமோத் மகாஜனை பிரவீன் சுட்டுக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் பிரமோத் மகாஜனின் மனைவி ரேகா உள்பட 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முதலில் குற்றத்தை ஒப்புக் கொண்ட பிரவீன், பின்னர் தான் கொலை செய்யவில்லை என்று மாற்றிப் பேசினார்.
பிரவீன் இவ்வாறு முரண்பட்டுப் பேசியதே அவருக்கு எதிரான முக்கியச் சாட்சியாக அமைந்துவிட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.