குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது. நண்பகல் வரை செளராஷ்டிரா பகுதியில் 25 விழுக்காடும், தெற்கு குஜராத்தில் 20 விழுக்காடும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.
இன்று தேர்தல் நடக்கும் 87 தொகுதிகளில் செளராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதியில் 58 தொகுதிகளும், தெற்கு குஜராத்தில் 29 தொகுதிகளும் உள்ளன.
முதல்கட்டத் தேர்தலுக்காக 19,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,834 சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றும், 1,306 சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் இயந்திரங்கள் வேலை செய்யாததால் பா.ஜ.க. வினர் ரகளையில் ஈடுபட்டனர்.
காலையில் 2 மணி நேரத்திற்கும் மேல் மிகவும் மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பின்னர் விறுவிறுப்பை எட்டியது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர், குஜராத் முதல்வர் மோடிக்கு எதிராக துண்டறிக்கைகளை வினியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரத் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து ரகளை செய்த பா.ஜ.க.வினரின் மீது அம்மாவட்ட ஆட்சியர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இத்தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கும் வேட்பாளர்கள் பட்டியலில், மாநில நிதியமைச்சர் வாஜூபாய் வாலா (ராஜ்காட் 2) , நீர்வளத் துறை அமைச்சர் நரோட்டம் பட்டேல் (சொராசி), நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஐ.கே.ஜடேஜா (தரங்தரா), சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் அர்ஜூன் மோத்வாதியா (போர்பந்தர்), நிதியமைச்சக துணையமைச்சர் செளராப் தலால் (பாவ் நகர்) ஆகியோர் உள்ளனர்.
மாநிலத்தில் மிகப் பெரிய தொகுதி கட்ச் பகுதியில் உள்ள 15.9 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட அப்தாசா ஆகும். சிறிய தொகுதி ராஜ்காட் அருகில் உள்ள 12,59,02 வாக்காளர்களைக் கொண்ட மானாவதார் ஆகும். போர்பந்தர் தொகுதியில்தான் அதிகமாக 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.