நமது நாட்டின் அயலுறவுக் கொள்கைகளை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாகவும், செலவுமிக்கதாகவும் உள்ள காரணத்தினால் ''அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது கைவிட வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான சீதாராம் யச்சூரி வலியுறுத்தினார்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பில்லாத விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய சீதாராம் யச்சூரி, ''மத்திய அரசுக்கு இடதுசாரிகள் அளித்துவரும் ஆதரவுக்கு அடிப்படையாக விளங்கும் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை'' என்றார்.
இந்த விவாதத்தில் சீதாராம் யச்சூரி தெரிவித்த குறிப்பிடத்தக்க விவரங்கள் வருமாறு:
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் நிறுவப்படும் அயல்நாட்டு அணு உலைகளின் விலை மிகவும் அதிகம். அந்த உலைகளுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என்பதற்கு ஒப்பந்தத்தில் எந்த உத்தரவாதமும் இல்லை.
மத்திய அரசு தெரிவித்துள்ள விவரங்களின்படி பார்த்தாலும் அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவப்படும் அணு உலைகளில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு ரூ.11 கோடி செலவாகும். அதேநேரத்தில் அனல் மின்சாரம், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் மின்சாரம் போன்றவற்றைப் பெறுவதற்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மட்டுமே செலவாகும்.
அணுசக்தி ஒப்பந்தப்படி 2020 ஆம் ஆண்டில் கூடுதலாக அயல்நாட்டு அணு உலைகளில் இருந்து 30,000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாகப் பெறுவதற்கு ரூ.3,30,000 கோடி செலவிட வேண்டும். அதிக செலவு பிடிக்கும், இத்திட்டத்திற்குப் பதிலாக நமது நாட்டில் உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி இயங்கும் அணு உலைகளை நாமே தயாரிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
இதன்மூலம் மீதமாகும் தொகையை கூடுதலாகப் பள்ளிகளைக் கட்டுவதற்கும், மருத்துவமனைகளை அமைப்பதற்கும், நமது நாட்டு அணு ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும் செலவிட்டால் நமது நாடு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே வளர்ந்த நாடாகிவிடும்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நமது அணுசக்தி குறிக்கோள்களை மறைமுகமாக பாதித்து அழித்துவிடும். இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளை தன்னுடையதாக்கி அமெரிக்காவின் துணை நாடாக மாற்றிவிடும் நோக்கத்துடன்தான் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஈரான்-பாகிஸ்தான் சமையல் எரிவாயுக் குழாய் திட்டத்தில் இந்தியா பின்வாங்கியதற்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தம்தான் காரணம். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிக்கப்படுகிறது. அதற்கு மத்திய அரசு அடிபணிகிறது என்றார் சீதாராம் யச்சூரி.