வாகனங்களை ஓட்டும்போது செல்பேசியைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் மாணிக்ராவ் ஹெச் காவித் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:
மத்திய சாலைப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ''செல்பேசியைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பான வழிமுறைகள்'' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், நடக்கும் போதும், வாகனங்களை ஓட்டும் போதும் செல்பேசிகளைப் பயன்படுத்துவதால் அதிகமாகக் கவனம் சிதறுகிறது என்று தெரியவந்துள்ளது.
வாகனம் ஓட்டும் போது செல்பேசிகளைப் பயன்படுத்துவதால் நிகழும் விபத்துகளின் விகிதம் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிகமாக உள்ளது.
ஏனெனில், நமது நாட்டில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்பேசியைப் பயன்படுத்துவதால், நான்கு சக்கர வாகன ஓட்டிகளைவிட அதிகமாக விபத்தில் சிக்குகின்றனர்.
அதேநேரத்தில் கைகளைப் பயன்படுத்தி பேசும் செல்பேசிகளைவிட கைகளைப் பயன்படுத்தாமல் பேசும் செல்பேசிகளால் ஏற்படும் விபத்துகள் குறைவுதான்.
பெருநகரங்களில், வாகனம் ஓட்டும் பெண்களில் 98 விழுக்காட்டினரும், ஆண்களில் 79 விழுக்காட்டினரும் செல்பேசிகளை வைத்துள்ளனர். ஆனால், 18 விழுக்காடு பெண்களும், 22 விழுக்காடு ஆண்களும் வாகனங்களை ஓட்டும்போது செல்பேசியைப் பயன்படுத்துகின்றனர்.
அதேபோல, படிப்பறிவுக்கும் செல்பேசி பயன்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதிகமாகப் படித்தவர்கள், செல்பேசியைச் சரியாகப் பயன்படுத்துகின்றனர் என்ற விவரங்களும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காவித் கூறியுள்ளார்.