நாகாலாந்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கோவா ஆளுநர் எஸ்.சி. ஜாமிர் உயிர் தப்பினார்.
கோவாவில் ஆளுநராக உள்ள எஸ்.சி.ஜாமிர் நாகாலாந்தில் முதலமைச்சராக இருந்தார். அப்போதிருந்தே அவரைக் கொல்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜாமிர் நாகாலாந்தில் உள்ள தனது சொந்த ஊரான மொக்காக்சுங்கிற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை 6.30 மணிக்கு திமப்பூருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் ஓரத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் ஜாமிரின் வாகனத்தை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஜாமிர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரின் பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஜாமிரைக் கொல்ல நடந்துள்ள 4வது முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.