மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் பிணை மனு மீதான விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு, தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்தும், தனக்குப் பிணை வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சஞ்சய் தத் மனு தாக்கல் செய்தார். அவருடன் யூசுப் நலவலா, சய்புனிசா அன்வர் காசி, சமீர் ஹிங்கோரா ஆகிய 3 குற்றவாளிகளும் தங்களின் பிணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் லோகேஷ்வர் சிங் பந்தா, ஜெ.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிணை மனுக்களின் மீதான விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
சஞ்சய் தத் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ஆர்.மனோகரும், ம.பு.க. சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியமும் ஆஜராயினர்.
வழக்கு விசாரணை நடந்த 12 ஆண்டுகளில் சஞ்சய் தத்தின் நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமாக இருந்ததால் அவருக்குப் பிணை வழங்க வேண்டும் அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.