கோத்ரா வன்முறைகளின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வழக்கில் மேலும் 3 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வந்த ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குஜராத்தில் பயங்கரமான கலவரம் வெடித்துப் பரவியது. பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள எரோல் பகுதி இக்கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
எரோலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் 2 சிறுமிகள் எரிக்கப்படுவதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோத்ரா நகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும் 3 பேருக்கு தலா மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. மீதமுள்ள 29 பேரையும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தாலும் குற்றவாளிகள் சிறையிலிருந்த காலத்தை தண்டனைக் காலத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளதால், தண்டனை பெற்றவர்கள் விரைவில் விடுதலையாகிவிடுவார்கள் என்று கருதப்படுகிறது.