''காங்கிரஸ் - பா.ஜனதாவுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணி அமைப்போம்'' என்று இடதுசாரி கட்சிகள் திடீரென அறிவித்துள்ளன.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுக்கும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் 3-வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் இணைந்து செயல்பட இடதுசாரி தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
கடந்த 22ஆம் தேதி, 3-வது அணி தலைவர் முலாயம் சிங், அமைப்பாளர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் சந்தித்து பேசினார்.
அதையடுத்து நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்தார். அப்போது, அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான முலாயம் சிங், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர் சிங் ஆகியோர் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தை சந்தித்து பேசினர். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
பின்னர் டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.பி.பரதன், டி.ராஜா ஆகியோரை முலாயம் சிங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது.
இந்த சந்திப்புகளில், அணுசக்தி ஒப்பந்தம், சிறுபான்மையினர் நலன், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ஏ.பி.பரதன் கூறுகையில், மக்கள் பிரச்சினைகளில் நாங்கள் ஒரே மாதிரியான கருத்துடன் இருக்கிறோம். மக்கள் பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது. அந்த அணி அமைக்கப்படும் என்றார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் இரு தரப்பினருமே எதிர்க்கிறோம். இது விஷயத்தில் பாராளுமன்றத்தில் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று மேலும் கூறினார்.
முலாயம் சிங் கூறுகையில், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் நாங்களும், இடதுசாரிகளும் ஒரே கருத்துடன் இருக்கிறோம். அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பாராளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றார்.
இதற்கிடையே 3-வது அணியின் அமைப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, தங்கள் அணியை பலப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார்.
பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதுபோல காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளையும் இழுக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருக்கிறார்.