மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள யுரேனியம் (அணு எரிபொருள்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வங்காளதேச எல்லையில் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜாங்கிபூரில் இருந்து வர்தமான் மாவட்டத்தில் உள்ள பாரக்கார் என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அப்பேருந்தில் இருந்த மர்மநபர் ஒருவன் தன்னிடமிருந்த பெட்டியை வைத்துவிட்டுத் தப்பியோடினான்.
அந்தப் பெட்டியில் இருந்த தோல்பையில் கதிரியக்கப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் அது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட யுரேனியம் என்றும், 2023ஆம் ஆண்டு வரை அதற்கு ஆயுள் உள்ளது என்பதும் தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட யுரேனியத்தின் மதிப்பு ரூ.100 கோடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிர்பும் மாவட்ட நீதிபதி தாபன் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
பேருந்து ஓட்டுநரிடமும், உடன் வந்த பயணிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.