தலைநகர் டெல்லியின் மத்தியப் பகுதியில் வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
புது டெல்லியில் உள்ள மயூர் பவனில் வருமான வரித்துறை, தொழிலாளர் வைப்புநிதி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இக்கட்டடத்தின் 5ஆவது மாடியில் இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இது மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் 40 வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர்.
விபத்திற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இவ்விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், ஆவணங்களும் சேதமடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.