உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அக்னி-1 இடைத்தூர ஏவுகணை 4 ஆவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைத் தளத்தில் இருந்து நடந்த இந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை 10.38 மணியளவில் நகரும் ஏவுதளத்தில் இருந்து இலக்கை நோக்கி அக்னி-1 ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை 700 கி.மீ தூரத்தில் தரையில் உள்ள இலக்கைத் துல்லியமாக தாக்கி அழித்தது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி அக்னி ஏவுகணை இதே வீலர்ஸ் தீவிலிருந்து முதன் முதலாக சோதனை செய்யப்பட்டது.
பின்னர் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இரண்டாவது முறையும், 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி மூன்றாவது முறையும் அக்னி ஏவுகணை சோதனை நடைபெற்றது.
15 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 ஏவுகணை 12 டன் எடையுள்ளது. 1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.