மேற்கு வங்கத்தில் மழையினால் நிரம்பி வழியும் நீர்நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் வெள்ளம் வடிந்துவருகிறது. அதேநேரத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
வெள்ள நிலைமைகள் குறித்துத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் அஸிம் தாஸ்குப்தா, நிலைமை முற்றிலும் சீரடையும் வரை நிவாரண உதவிகள் தொடரும் என்றார்.
கடந்த வாரம் முதல் வெள்ளத்தினால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 31லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹூக்ளி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.
இக்குழுவில் நிவாரணத்துறை அமைச்சர் மொர்ட்டாசா ஹூசைன், பாசனத்துறை அமைச்சர் சுபாஷ் நாஷ்கர், வேளாண்துறை அமைச்சர் நரேன் டே மற்றும் நிதியமைச்சர் ஆஸிம் தாஸ்குப்தா ஆகியோர் உள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் 4470 மருத்துவர்கள் அடங்கிய 745 குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர்.
வெள்ள நிவாரணத்திற்காக ரூ.107 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகள் சீரமைப்பு, வேளாண் நிலங்கள் சீரமைப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.