கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழை பீகாரில் கொட்டித் தீர்த்தது. பீகார் மாநிலத்தின் பாட்னா நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த பருவ மழைத் தொடங்கி இதுவரை பாட்னா நகரில் 1531 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 74.8 மி.மீ. மழை கொட்டியுள்ளது.
வரலாறு காணாத மழையால் பாட்னா நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணா நகர், பாடலிபுத்ர நகர், கங்கார்பாக் உள்பட பல இடங்களில் 2 மீட்டர் உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கி உள்ளது.
பெரும்பாலான வீடுகளில் கீழ்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. தலைமைச் செயலகம், சட்டசபை வளாகம் ஆகியவையும் வெள்ளத்துக்கு தப்பவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டு கிடக்கின்றன. ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன
இதற்கிடையே பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மேலும் 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.