ஆந்திர மாநில அரசுப் பணிகளிலும், அரசு கல்விக் கூடங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு பிறப்பித்த பிரகடனத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. எனவே கடந்த ஜூலை 15ஆம் தேதி ஆந்திர அரசு பிறப்பித்த பிரகடனத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி டி.ஆர். முரளிதர் ராவ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், வி.எஸ். சிர்புர்கார் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, இவ்வழக்கு மீதான விசாரணை முடியும் வரை ஆந்திர அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.
மனுதாரரின் கேள்விக்கு இம்மாதம் 28ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.