இந்தியாவில் பெரும் அளவிற்குக் கிடைக்கும் தோரியம் அணு எரிபொருளைப் பயன்படுத்தக்கூடிய அணு உலை உருவாக்கும் திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும் என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் கூறியுள்ளார்!
பெங்களூருவில் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து நேற்று இரவு முக்கிய உரையாற்றிய விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன், 300 மெகாவாட் மின் தயாரிப்புத் திறன் கொண்ட தோரியம் அணு மின் உலை நமது எரிசக்தித் தேவையை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கூறினார்.
நமது நாட்டின் 16 அணு மின் நிலையங்களைத் துவக்கியதில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி சீனிவாசன், அணு சக்தி தேவைக்கான எரிபொருள் நமது நாட்டில் குறைவாக உள்ளது மட்டுமின்றி, கிடைக்கும் இடங்களில் சுரங்கம் அமைப்பதற்கு உள்ளூர் எதிர்ப்பும் ஒரு பெரும் தடையாக உள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில், தோரியம் அணுப் பொருளின் கண்டுபிடிப்பு நமது எதிர்கால மின் சக்தித் தேவைக்குத் தீர்வைத் தந்துள்ளது.