Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லடாக்கில் யுரேனியம் கண்டுபிடிப்பு!

லடாக்கில் யுரேனியம் கண்டுபிடிப்பு!

Webdunia

, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (15:45 IST)
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பகுதியாக உள்ள லடாக்கில் மிகத் தரம் வாய்ந்த யுரேனியம், தோரியம் கொண்ட கனிமங்களை புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்!

குமாவுன் பல்கலையைச் சேர்ந்த புவியியலாளர்கள், லடாக்கின் வடபகுதியில் உள்ள நூப்ரா-ஷியோ பள்ளத்தாக்கில் உள்ள ஹூட்மாரு எனும் கிராமத்தில் யுரேனியமும், தோரியமும் கலந்த பச்சை நிறத்திலான ஜிர்க்கான் மற்றும் யூஹிட்ரால் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளதாக கரண்ட் சயின்ஸ் எனும் விஞ்ஞான நாளிதழில் புவியியலாளர் ராஜீவ் உபாத்யாய் கூறியுள்ளார்.

நூப்ரா-ஷியோ பள்ளத்தாக்கு எரிமலையால் உருவான பாறை மலையாகும். இங்கு தாங்கள் கண்டுபிடித்துள்ள ஜிர்க்கானில் யுரேனியமும், தோரியமும் மிக அதிகமான செரிவுடன் உள்ளது என்று ராஜீவ் உபாத்யாய் கூறியுள்ளார்.

இங்கு எடுக்கப்பட்ட மாதிரிகளை ஜெர்மனியில் உள்ள ஐசோடோப் ஆய்வகத்திற்கு அனுப்பியதில், அந்தக் கனிமத்தில் 5.3 விழுக்காடு அளவிற்கு யுரேனியம் உள்ளது தெரியவந்துள்ளதாக ராஜீவ் கூறியுள்ளார்.

ஆனால், ஆய்விற்கு அனுப்பப்பட்ட மாதிரி மிகக் குறைந்த அளவிலானது என்றும், அதை வைத்து இறுதி முடிவு செய்துவிட முடியாது என்றும் அணு சக்தி துறையின் பொது விழிப்புணர்வுப் பிரிவுத் தலைவர் எஸ்.கே. மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

அணு சக்தித் துறையின் ஒரு அங்கமான அணுக் கனிமங்கள் இயக்ககம், அந்தப் பகுதி முழுவதையும் ஆராய்ந்து அங்கு கிடைக்கும் கனிமத்தை முழு அளவிற்கு ஆய்வு செய்த பின்னரே அது வணிக ரீதியாக லாபகரமானதுதானா என்பதனை முடிவு செய்யும் என்று மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil