பொருளாதார வளர்ச்சியை அரசு பெரிதுப்படுத்திக் காட்டினாலும் வறுமையின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மாநிலங்களவையில் இன்று நிதி ஒதுக்கீடு எண் 3 சட்டவரைவின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக உறுப்பினர் ராமதாஸ் அகர்வால், நாட்டில் வறுமையில் வாழும் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் அரசு விவசாயத்திற்கு உதவ வேண்டும். ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பெரும் அளவிற்கு அரசு மானியம் அளிக்கின்றது. அது பெரும் தொழில் நிறுவனங்களுக்கே பயனளிக்கின்றது என்றும் குற்றம்சாற்றினார்.
கடந்த சில மாதங்களில் சராசரி மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதில் வரக்கூடிய லாபத்திற்கு எந்த வரியும் கட்டாமல் தங்கள் நாட்டிற்குக் கொண்டு செல்கின்றனர் என்று கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் சந்தோஷ் பகோடியா, அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி விலைகள் குறைக்கப்பட வேண்டும். நேரடி வரிகளை குறைத்தால் வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்று கூறிய சந்தோஷ் பகோடியா, நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாகவே சேமிப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறுவது வெறும் புள்ளி விவரம்தானே தவிர, உண்மையல்ல என்று அஇஅதிமுக உறுப்பினர் மலைச்சாமி குற்றம்சாற்றினார்.