மத்திய அரசின் எண்ணை நிறுவனங்களில் பணியாற்றிம் அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விநியோகம் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணை சம்மந்தப்பட்ட 15 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கச்சா எண்ணை உற்பத்தி நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியற்றில் சுமார் 45 ஆயிரம் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள், சம்பள உயர்வு வழங்க வேண்டும், 2005 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 50 விழுக்காடு பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரிகளின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக தினசரி ரூ.1,400 கோடி இழப்பு ஏற்படலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் உற்பத்தியும் பாதிக்கும். இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானங்களுக்கான எரிபொருள் சேவையும் பாதிக்கும் அபாயம் உண்டு.
இதற்கிடையே போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சி நடந்து வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.என்.ஜி.சி. தலைவர் ஆர்.எஸ்.சர்மா, கடந்த2 நாட்களாக அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களுடைய கோரிக்கைகள் தகுதி அடிப்படையில் ஏற்கப்படும் என்றும் இடைக்கால நிவாரணம், ஊக்கத்தொகை, மாத அலவன்ஸ் வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஆனால் இந்த இடைக்கால நிவாரணத்தை அதிகாரிகள் சங்கம் நிராகரித்துவிட்டது.