"சில உறுப்பினர்களின் நடத்தை நாடாளுமன்ற நடைமுறை விதிகளை மீறியதாகவும், கவலையளிக்கக் கூடியதாகவும் உள்ளது" என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்!
கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி அவை நடவடிக்கைகளை தடுப்பது குறித்து அறிக்கை ஒன்றை வாசித்த சோம்நாத் சாட்டர்ஜி, "உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை வலியுறுத்திக் கூறுவதற்கு அவை நடவடிக்கை விதிகள் வாய்ப்பளிக்கின்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்படிப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டு வருவதை அவைத் தலைமை அனுமதிக்க முடியாது. பெருமை மிக்க இந்த அவையின் மதிப்பு இப்படிப்பட்ட முறையற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகளால் குறைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று கூறினார்.
சோம்நாத் சாட்டர்ஜி அறிக்கை வாசித்து முடித்ததும் எழுந்து பேசிய பா.ஜ.க. உறுப்பினர்கள், அவருடைய அறிக்கை உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதாக உள்ளது, ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகளிடம் மென்மையாகவும், எதிர்க்கட்சிகளிடம் கடுமையாகவும் நடந்து கொள்கிறார் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.