புற்று நோயால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 80.
கடந்த 3 மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சந்திரசேகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.30 மணிக்கு சந்திரசேகர் மரணமடைந்தார்.
சந்திரசேகரின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முக்கியத் தலைவர்களும், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சந்திரசேகரின் உடல் தகனம் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சந்திரசேகர் 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை இந்தியாவின் 11வது பிரதமராக பதவி வகித்தார்.
வி.பி. சிங் அரசு கவிழ்ந்ததால் சந்திரசேகர், காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் பதவி ஏற்றார். ஆனால் அவர் பதவியேற்ற சிறிது காலத்திலேயே அவருக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றதால் அவர் பதவி இழந்தார்.
.