நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க சட்ட ரீதியான அமைப்பு உருவாக்குவது தொடர்பான சட்டம் குறித்த வரைவு அறிக்கை நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்!
தனி நபர், பொது குறை தீர்ப்பு, சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றிற்கான நாடாளுமன்றத்தின் நிலைக்குழுத் தலைவர் இ.எம். சதர்சன நாச்சியப்பன், மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிப்பது தொடர்பாக பல்வேறு சமூக, சட்ட பிரிவினர்களிடையே பேசியதற்குப் பிறகு அச்சட்டத்திற்கான இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக நாச்சியப்பன் கூறினார்.
நீதிபதிகளுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்படும் நிலையில், அந்த குறிப்பிட்ட நீதிபதியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசமைப்புச் சட்டம் 124 (4) மற்றும் 124 (5) ஆகியவற்றின் கீழ் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பதா அல்லது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகள், உயர் நீதிமன்றங்கள் இரண்டின் தலைமை நீதிபதிகள் கொண்ட தேச நீதிப் பேரவையின் முடிவிற்கு விட்டுவிடுவதா என்பது குறித்து கருத்துக்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
பொதுத்துறை நிறுவனங்களில் குறைதீர்ப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து மராட்டிய அரசுடனும், பல்வேறு பொதுத்துறை நிறுவன மூத்த அதிகாரிகளுடனும் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்தியது. இக்குழுவில் டாக்டர் பி.சி. அலெக்சாண்டர், சைலேந்திரகுமார், எஸ்.கே. கார்வேந்தன், தாரிக் அன்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். (பி.டி.ஐ.)