புதிதாக உருவாகி உள்ள 3 வது அணியால் கலக்கம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
அதிமுக, மதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ வாதி, அசாம் கணபரிஷத், இந்திய தேசிய லோகதளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, கேரள காங்கிரஸ், ஆகிய அரசியல் கட்சிகளை கொண்ட "புதிய தேசிய முன்னணி" உருவாகி இருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள 8 கட்சிகளுமே பிராந்தியக் கட்சிகள் ஆகும்.
இந்நிலையில், தேசிய அளவில் உருவாகி உள்ள புதிய அணி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், புதிய அணியால் கலக்கம் இல்லையென்றும், இது ஜனநாயக அமைப்பில் சகஜமான ஒன்று என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பாந்தே கூறுகையில், இது தேர்தலுக்கான கூட்டணி என்றும், இவர்களுக்கு செயல் திட்டமோ, கொள்கையோ கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும், எந்தவித பொது செயல் திட்டமும் இன்றி உருவாகும் ஒரு அணி, நாட்டின் மக்கள் பிரச்சனையை தீர்க்க உதவாது என்றும் கூறினார்.