பாக். துறைமுகம் சீனா கையில்- இந்தியாவுக்கு ஆபத்து
, செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (15:09 IST)
அரபிக்கடலில் உள்ள குவாடார் துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சீனாவின் வெளிநாட்டு துறைமுக பொறுப்புக்கு பாகிஸ்தான் அரசு ஒப்படைத்துள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெறும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் ஆவணங்கள் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பாணி முன்னிலையில் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.அதன்படி இங்கு கிடைக்கும் லாபத்தை இருநாடுகளும் பங்கிட்டு கொள்ளலாம்.இது குறித்து அதிபர் சர்தாரி கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான்-சீனா இடையே அரசியல் ரீதியான ஒத்துழைப்புடன் பொருளாதார ஒத்துழைப்பும் மேம்படும் என்றார்.குவாடர் துறைமுகம் சீனாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய்க் கப்பல்கள் குவாடார் துறைமுகம் வழியாகவே அதிகம் பயணிக்கின்றன. இந்த துறைமுக வளர்ச்சிக்கு 248 மில்லியன் டாலர் நிதியுதவியை சீன அரசு வழங்கியுள்ளது.பாகிஸ்தான் மட்டுமின்றி இலங்கை மற்றும் வங்கதேசத்திலும் துறைமுக வளர்ச்சிக்காக சீன அரசு பெரும் தொகையை கொடுத்து கையகப்படுத்தியுள்ளது. சுற்றத்திலிருக்கும் நாடுகள் உடனான சில ஒப்பந்தங்களால், சீனா இந்தியாவின் பாதுகாப்புக்கு பெறும் அச்சுறுத்தலாக இருக்கும். இந்த விவகார இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை கவலையடையச் செய்துள்ளது.