அமெரிக்காவை எதிர்த்து அணுஆயுத சோதனை - வடகொரியா
, வியாழன், 24 ஜனவரி 2013 (20:59 IST)
அமெரிக்காவைக் குறிவைத்து அணு ஆயுத சோதனை மற்றும் ராக்கெட் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்மட்ட அணு ஆயுத சோதனை, செயற்கை கோள்கள் மற்றும் நீண்ட தூர இலக்கைத் தாக்கும் ராக்கெட் சோதனைகளை தொடர்ந்து நடத்துவோம். இதை நாங்கள் மறைக்க விரும்பவில்லை. இந்த சோதனைகள் எங்கள் பரம எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக திடாமிட்டு குறிவைத்து நடத்தப்படுகின்றன’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இந்த சோதனை எங்கு, எப்போது நடத்தப்படும்? "உயர்மட்ட அணு ஆயுத சோதனை" என்றால் என்ன பொருள்? ஆகியவற்றைப் பற்றி அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை விதித்த தடையை மீறி வடகொரியா கடந்த மாதம் நீண்ட தூர ராக்கெட் சோதனையை நடத்தியது. இதனை கடுமையாக கண்டித்த ஐநா பாதுகாப்பு சபை, அந்த நாட்டின் மீது புதிய தடைகளை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அந்நாட்டு பாதுகாப்பு ஆணையம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.வடகொரியா இதற்கு முன்பு 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அணு ஆயுத சோதனை நடத்தியிருக்கிறது. விரைவில் 3-வது சோதனையை நடத்த ஆயத்தமாகி வருவதையே இன்றைய அறிக்கை மறைமுகமாக காட்டுகிறது.