எல்லை சண்டையால் பாக். - இந்தியா உறவு பாதிக்காது
, வெள்ளி, 11 ஜனவரி 2013 (12:19 IST)
ஜம்மு எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நடந்த போர் நிறுத்த மீறலால், இந்தியா - பாகிஸ்தான் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்படாது என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஹீனா ரபானி தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறுகையில், சண்டை நிறுத்த மீறலால் அமைதி நடவடிக்கை கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது என் நம்பிக்கை. அமைதி பேச்சுவார்த்தையில் எந்த பின்னடைவும் ஏற்படாது என்று நம்புகிறேன். இரு நாடுகளும் நிலைமையை சரி செய்ய தங்களுடைய பங்களிப்பை அளிக்கும்.இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவின் மூலம் பிரச்னை குறித்து விசாரணை நடத்துவதில் பாகிஸ்தான் தயாராக உள்ளது. எங்களிடம் ரகசியம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு விசாரணை நடத்துவதுதான் சரி. ஆனால், இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக சில விரும்பத்தகாத அறிக்கைகள் மற்றும் சூழ்நிலைகள் ஆகியவற்றால் நிலைமை மோசமானது.பாகிஸ்தான் மக்களும், அரசும், இந்தியா உடனான உறவு மேம்பட வேண்டும் , இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும்தான் விரும்புகிறார்கள் என்று ரபானி கூறியுள்ளார்.