சாண்டி புயல் ஏற்படுத்திய கோர தாண்டவத்திலிருந்து நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு புயல் புதனன்று தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புதிய புயல் சாண்டி புயல் போன்று அபாயகரமானது இல்லை என்றாலும், மணிக்கு 55மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"தயாராக இருக்கவும், வீட்டிற்குள் இருக்கவும்" என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.
சாண்டி அளவுக்கு இந்த புயல் பலமாக இல்லாவிட்டாலும் வழக்கமான புயலை விட அதிக பலமான காற்று வீசும் என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நியூயார்க் நகரில் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே குளிர் காற்று வீசத் தொடங்கியுள்ளது. வீடுகளில் உஷ்ணப்படுத்தும் எந்திரம் இல்லாமல் இருப்பது மிகவும் கடினமாக அமையும் என்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ எச்சரித்துள்ளார்.
சாண்டி புயலால் நியூயார்க்கில் 30,000 பேருக்கு புதிய வாழ்விடம் கட்டித் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அடுத்த புயல் பற்றிய செய்தி அங்கு பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.