'ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தாவிட்டால் அணு உலை மீது குண்டு வீசப்படும்'' என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரான் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை நிறுத்தாவிட்டால் அணு உலை மீது குண்டு வீசுவோம் என்று இஸ்ரேல் ஏற்கனவே மிரட்டல் விடுத்தது. பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் யூதர்களின் வாக்குகளை பெறவே ஈரான் மீது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிடுவதாக தெரிகிறது.
அண்மையில் இஸ்ரேல் சென்ற ஒபாமாவின் ஆலோசகர் டோனிலான் பிரதமர் நெதான்யாஹூவை சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிபர் தேர்தலை முன்னிட்டு இந்த பிரச்சனையில் ஒபாமா தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், சுமுகமாக பேசி தீர்க்க இன்னும் காலம் இருப்பதாகவும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படாது என்றும் கூறினார்.