Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு சர்வதேச மன்னிப்பு சபை கிடுக்குப்பிடி

Advertiesment
இலங்கைக்கு சர்வதேச மன்னிப்பு சபை கிடுக்குப்பிடி
நியூயார்க் , வியாழன், 8 செப்டம்பர் 2011 (13:45 IST)
போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளைத் தவிர மாற்று நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18 வது அமர்வு கூடவுள்ள நிலையில் 69 பக்க அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்டித்துள்ள மன்னிப்பு சபை, இது தொடர்பாக்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இறுதிகட்ட போரின் போது குறைந்ததது 10 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவம் பொதுமக்கள் மீது இறுதிப்போரின் போது எறிகனை தாக்குதல்களை நடத்தியது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்து மட்டத்திலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.

முன்னாள் அரச பணியாளர்களை வைத்து தமது சாட்சிப்பதிவுகளை மேற்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பபட்டவர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்வதில் தோல்விகண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச சமூகம் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின் நம்பகத்தன்மையை பரிசீலிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சராபி கோரியுள்ளார்.

இலங்கை அரசு தமது படையினரால் ஒரு பொதுமகன் கூட இறுதிப்போரின் போது கொல்லப்படவில்லை என்பதை தொடர்ந்தும் கூறிவருகிறது.

அத்துடன் இலங்கை ஐக்கிய நாடுகள் பேரவையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறது.

இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழு, சர்வதேச மட்டத்தில் மாத்திரமன்றி உள்ளக விசாரணையிலும் தோல்வி கண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் யாவற்றுக்கும் பொறுப்புக்கூறலை மறுத்தல் மற்றும் நிராகரித்தல் என்ற விடயங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே சர்வதேச சமூகம் இலங்கையில் சர்வதேச விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதன்மூலமே இலங்கையில் நல்லிணக்க அரசியல் ஒன்றை கொண்டு நடத்தமுடியும் என்று பணிப்பாளர் சராபி குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil