ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ள நிலையில், அப்படிப்பட்ட அமைதி வழிப் போராட்டங்களை ஜனநாயக நாடான இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு பேச்சாளர் விக்டோரியா நூலண்ட்-டிடம், ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே அறிவித்துள்ள அற வழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி மறுத்து வருவது மட்டுமின்றி, அந்தப் போராட்டத்தை ஒடுக்கு முற்பட்டுள்ளதே என்று செய்தியாளர் ஒருவர் வினா தொடுத்தார்.
இதற்கு பதிலளித்த விக்டோரியா நூலண்ட், “அமைதியாகவும், வன்முறையின்றியும் போராட்டங்களை நடத்தும் உரிமையை, அது உலகில் எஙகு நடந்தாலும் அதனை அமெரிக்கா ஆதரித்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று கூறிவிட்டு, “ஜனநாயக நாடான இந்தியா, அப்படிப்பட்ட போராட்டங்களை சரியான ஜனநாயக உணர்வுடன் கையாள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.