Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்பு போரினால் 2 லட்சம் பேர் பலி

Advertiesment
அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்பு போரினால் 2 லட்சம் பேர் பலி
நியூயார்க் , சனி, 2 ஜூலை 2011 (13:37 IST)
தீவிரவாத ஒழிப்பு போர் என்ற பெயரில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரினால் 2,25,000 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடியாக அல் காய்தா மற்றும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பதில் தாக்குதலை நடத்தியது.

அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டு, தாலிபான்களின் பலமும் ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையிலும் ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படையினர் இன்னமும் தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திதான் வருகின்றனர்.

மேலும் பாகிஸ்தான் மற்றும் ஏமனிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேப்போன்று ஈராக்கிலும் அமெரிக்கா படையெடுத்து சதாம் உசேன் ஆட்சியை அகற்றியதோடு, அவரது ஆதரவாளர்களையும் வேட்டையாடியது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த போரினால் இதுவரை 2,25,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,65,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

போரில் 31,741 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் அமெரிக்கர்கள் 6 ஆயிரம் ,துணை படையினர் 1,200, ஈராக்கியர்கள் 9,900, ஆப்கானியர்கள் 8,800, பாகிஸ்தானியர்கள் 2,300 பேர் மற்றும் 2,300 அமெரிக்க தனியார் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களில் 1,72,000 பேர் பலியாகி உள்ளனர்.அவர்களில் 1,25,000 ஈராக்கியர்களும், 35,000 பாகிஸ்தானியர்களும் மற்றும் 12,000 ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்களும் ஆவர்.

அத்துடன் 168 நிருபர்கள் மற்றும் 266 மனிதாபிமான முறை ஊழியர்கள் ஆகியோரும் அத்தாக்குதலில் இறந்துள்ளனர்.போரினால் 78 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

மேலும் இந்த போரினால் இதுவரை 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil