விடுதலைப் புலிகளின் நிதியை கே.பி. கொண்டுவந்தால் அது ராஜபக்சவின் குடும்பத்துக்கே போய்ச் சேரும் என்று புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைக் கைப்பற்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,பிபிசி-க்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கே.பி.-யின் இந்த கருத்து தொடர்பாக விக்கிரமபாகு கருணாரத்ன அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கே.பி. தங்கக் கூண்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதி.வெளிநாடுகளிலுள்ள புலிகளின் நிதியை அவர் எப்படி வெளிக்கொணர முடியும்.அந்த நிதியை இலங்கைக்குக் கொண்டு வந்தால் ராஜபக்சவின் குடும்பத்துக்கே அது போய்ச் சேரும்.தமிழ் மக்களுக்கு சிறு தொகையே சென்றடையும்.
கே.பியை அரசு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் இலங்கை அரசு பயன்படுத்துகின்றது.போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு வெளிநாட்டில் புலி ஆதரவாளர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கைப்பற்றி பயன்படுத்துவேன் என்று கே.பி. கூறியுள்ளார்.
ஒரு கைதி எப்படி சுயாதீனமாகச் செயற்பட முடியும்? அதுவும் வெளிநாட்டு விடயங்களில்? எனவே, இதிலிருந்து இதன் பின்னணியில் அரசு உள்ளது என்பது எமக்குத் தெட்டத் தெளிவாகப் புரிகின்றது.
அப்படியே பணம் கைப்பற்றப்பட்டாலும் அது தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது.மாறாக ராஜபக்சவின் குடும்பத்தின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படும். எனினும், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு ஒரு சிறு தொகை வழங்கப்படலாம்.
அதுவும் சந்தேகமாகவே உள்ளது.ராஜபக்சவின் குடும்ப நலன்களுக்காகவே கே.பி. பயன்படுத்தப்படுகின்றார்.ஒரு சமூகத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டு, அரசின் சூழ்ச்சிக்கு கே.பியும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.