பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ராவல்பிண்டி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலின்போது தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலுள்ள ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்த பெனாசிர் புட்டோ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெனாசிர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. நிபுணர் குழு, முன்னாள் பிரதமராக இருந்த பெனாசிர் புட்டோவிற்கு போதுமான அளவு பாதுகாப்பை வழங்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாற்றியிருந்தது.
பெனாசிர் புட்டோ கொலை வழக்கை விசாரித்துவரும் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால குற்றப்பத்திரிக்கையில் முஷாரஃப் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கில் முஷாரப்புக்கு ராவல்பிண்டி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
தற்போது முஷாரப் தனது குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.