தென் கொரியா மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி போருக்குத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வட கொரியாவிற்கு எச்சரிக்கை செய்யுங்கள் என்று சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் நிர்வாகத் தலைமையகமான வெள்ளை மாளிகையில் இருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் தாக்குதல் உள்ளிட்ட பன்னாட்டு பிரச்சனைகள் தொடர்பாக சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் பராக் ஒபாமா பேசியதாகவும், அப்போது வட கொரியா நடத்திவரும் தாக்குதல்கள் ஏற்கத் தக்கதல்ல என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
“தென் கொரியாவை போருக்கு இழுக்கும் தாக்குதல்களை வட கொரியா நிறுத்த வேண்டும் என்று அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். 2005ஆம் ஆண்டு ஆறு நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை உள்ளிட்ட பன்னாட்டு உடன்படிக்கைகள் அனைத்தையும் வட கொரியா காப்பாற்ற வேண்டு்ம்” என்று ஒபாமா கேட்டுக்கொண்டதாகவும், அவருக்கு பதிலளித்த சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ, இப்பிரச்சனையில் தொடர்புடைய அனைவரும் பொறுமையுடனும், அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.