சீன அரசின் எதிர்ப்பாளரும், அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் கோரிப் போராடி வருபவருமான லியூ ஜியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளுக்கான 2010 ஆம் ஆண்டுக்குரிய நோபல் பரிசுகளை, நோபல் பரிசு கமிட்டி அறிவித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு, லியூ ஜியாபோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முழு வீச்சிலான அரசியல் சீர்திருத்தம், நாடாளுமன்ற சுதந்திரம், மத வழிபாட்டு சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தி 'சார்ட்டர் 08' என்கிற அரசுக்கு எதிரான சாசனத்தை வெளியிட்டதற்காக சீன அரசு அவரைக் கடந்த 2008 ஆம் ஆண்டில் கைது செய்து, சிறையில் அடைத்தது.
இன்னும் சிறையில் வாடி வரும் லியூ, இதற்கு முன் 1989 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு கட்சி கம்யூனிச ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியதற்காக 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1
அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு கோரியதற்காக "மறு கற்பித்தல்" முகாமில் 3 ஆண்டுகள் வைக்கப்பட்டார்.
ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தலாய் லாமா போன்றோர் லியூவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், தாங்கள் சிறையில் அடைத்திருக்கும் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது குறித்து சீனா அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ள நிலையில், இந்த விடயம் உலக அளவில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.