Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைப் படையின் போர்க்குற்றங்கள்: அனைத்துலகத் தலையீட்டுடன் விசாரணை கோருகிறார் உருத்திரகுமாரன்

இலங்கைப் படையின் போர்க்குற்றங்கள்: அனைத்துலகத் தலையீட்டுடன் விசாரணை கோருகிறார் உருத்திரகுமாரன்
, திங்கள், 21 டிசம்பர் 2009 (17:47 IST)
விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக சமூகம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அண்மையில் விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர்களான நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாக விடுத்த அறிவிப்பின் அடிப்படையில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பாளரான லுயிஸ் மொரினோ ஒக்கம்போ, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட குறித்த சம்பவத்தினை மட்டுமல்லாது, ஜனவரி 2009 முதல் மே 2009 வரையிலான இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா ஆயுதப் படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசு கேட்டுக்கொள்கிறது.

ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இந்தப் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றினை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும், சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தின் பங்குதரார்களான நாடுகள் இந்த விடயத்தினை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும் நாடு கடந்த தமிழீழ அரசு அறைகூவல் விடுகின்றது.

கடந்த மே மாதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள், ஆயுதங்களை கீழே வைத்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முற்பட்ட வேளையில், அவர்களைக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச உத்தரவிட்டதாக சிறிலங்காவிலிருந்து வெளியாகும் 'சண்டே லீடர்' பத்திரிகையில் டிசம்பர் 13 வெளிவந்த நேர்காணலொன்றில் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

முதலில் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் செல்லுமாறு தெரிவிக்கப்பட்ட இரு புலிகள் இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு கோத்தபாய நேரடியாக இராணுவத் தளபதிகளுக்கு உத்தரவிட்டதை அரசாங்க ஊடக செய்தியாளர்களின் மூலம் தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பொன்சேகா தனது கூற்றினைப் பின்னர் மறுத்தபோதும் சண்டே லீடர் நேர்காணல், மனித உரிமைகள் அமைப்புகளது அறிக்கைகள், அமெரிக்க அயலுறவுத்துறை அறிக்கை, இது தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகின்றன.

மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் விடயத்தில் சிறிலங்கா இதுவரை நடந்து கொண்ட முறையும் (1977, 1983 இனப் படுகொலை, 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலக எரிப்பு, 1996 ஆம் ஆண்டு செம்மணிப் படுகொலைகள், 1996 கிருசாந்தி படுகொலை, 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் உதவிப் பணியாளர்கள் படுகொலை), அமெரிக்க அயலுறவுத் துறையின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் சிறிலங்காவில் தண்டனைகள் தவிர்க்கப்படுவது எவ்வாறு பிரச்னையாகவே உள்ளதாகத் தொடர்ச்சியாகவும், மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருவதும், சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணையைக் கோருவதனை கேலிக் கூத்தாக்குகின்றது.

உள்நாட்டு விசாரணைகள் பயனற்றவையாக அமையுமென்று தெரிந்தால் சர்வதேச விசாரணைக்கு முன்னோடியாக உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமில்லை என்பது நன்கு நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகளிலொன்றாகும்.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்படாமால் இருப்பது உலகளாவிய தமிழ் சமூகத்தினரிடம் நிலவும் ஏமாற்றப்பட்ட உணர்வினை மேலும் ஆழப்படுத்தும்.

சர்வதேச சமூகத்தின் செயற்படாத் தன்மையானது சர்வதேச நிறுவனங்களின் நம்பகத் தன்மையைப் பாதிப்பதுடன் நீதி சார்ந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கவும் செய்யும்.

மேலும் சர்வதேச ஒழுங்குமுறையற்ற அரசுகள் மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சகல மனிதாபிமானச் சட்டங்களையும் தங்கள் கைகளில் எடுப்பதையும் இது ஊக்குவிக்கும்.

இவ்வாறு அதில் உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil