வன்னி வதை முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்ந்துவந்த திருகோணமலைப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 60 பேருக்கும் விடுதலைப் புலிகளோடு தொடர்பு உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தியப் பிறகு அவர்கள் அனைவரும் சிறிலங்க அரசின் மறுவாழ்வுத் துறையின் ஆணையர் டி. ரத்னாயக்கே கண்காணிப்பில் மறுவாழ்வு அளிப்பதற்கு ஒப்படைக்கப்படுவார்கள் என்று சிறிலங்க இராணுவத்தின் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.
வன்னி முகாம்களில் இருந்தவர்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற்றுவதற்கு முன்னர் அவர்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அவர்கள் புலிகளோடு தொடர்புடையவர்களா என்பதை உறுதிபடுத்தும் நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது என்றும் சமரசிங்கே கூறியுள்ளார்.
வன்னி முகாம்களி்ல் இருந்து விடுவிக்கப்படுவோரை இவ்வாறு புலிகளோடு தொடர்புடையவர்களா என்று ஆய்வு செய்து முடிக்கும் வரை அவர்களை பள்ளிகள் அல்லது அரசுக் கட்டடங்களில் மீண்டும் அடைத்து வைக்கின்றனர். அப்போது உள்ளூர் காவலர்களும், இராணுவத்தினரும் வந்து அவர்களில் சிலரை விசாரணைக்கு என்று அழைத்துக் கொண்டு செல்வதும், அவர்கள் மீண்டும் திரும்பி வராததும் தொடர்கதையாகி வருகிறது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.