ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இனவெறி மட்டுமே காரணமல்ல என்றும்,அவர்களது நிதி நிலைமையும் ஒரு காரணம் என தெர்விக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்குள்ள மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக கடந்த ஞாயிறன்று அதிகாலை 12.45 மணியளவில், மெல்பர்னின் எப்பிங் ரயில் நிலையம் அருகே உள்ள கோப்பர் சாலையில் பேருந்திற்காக காத்திருந்த சீக்கிய இளைஞரை, 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.
இந்நிலையில்,இந்திய மாணவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு இனவெறி மட்டுமே காரணமல்ல என்றும்,அவர்களது நிதி நிலைமையும் ஒரு காரணம் என்று விக்டோரியா இந்திய சங்க கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
" இந்தியாவிலிருந்து ஆஸ்ட்ரேலியா வந்து பயிலும் மாணவர்கள்,தங்களது கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக பகுதி நேரமாக பணி புரிய வேண்டிய நிலையில் உள்ளனர்.
அவ்வாறு வேலைக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் நள்ளிரவு, அதிகாலை போன்ற ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் பேருந்து நிலையத்திலிருந்தும்,ரயில் நிலையத்திலிருந்தும் வெளியே வரும்போதோ அல்லது காத்திருக்கும்போதோ சமூக விரோத கும்பல்களின் தாக்குதலுக்கு எளிதாக இலக்காகி விடுகின்றனர்.
எனவே இந்திய மாணவர்கள் தங்களது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை தாங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.அது அவர்களது கடமையும் கூட.
சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளான சீக்கிய மாணவர் பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்போது தாக்கப்பட்டுள்ளார்.அந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் அவ்ர் ஏன் தூங்கிக்கொண்டிருந்தார்.இவ்வாறு செய்வதன் மூலம் பிரச்னைகளை அவர்களே வரவழைத்துக்கொள்வது போன்றல்லவா உள்ளது ? " என அவர் மேலும் கூறினார்.