பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் தாலிபான் தீவிரவாதிகளை விரட்டுவோம் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் சௌத்ரி அகமது முக்தார் தெரிவித்துள்ளார்.
லண்டனில் வெளியாகும் ‘தி சண்டே டைம்ஸ்’ நாளிதழுக்கு முக்தார் அளித்துள்ள பேட்டியில், ராணுவத்தின் நடவடிக்கை காரணமாக இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வடக்கு வசிரிஸ்தானில் தாலிபான்களை முற்றிலுமாக விரட்டியடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆனால், தாலிபான்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதால், நகரப் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அடுத்த 10 முதல் 12 நாட்களுக்கு அதிகளவில் இருக்கும். அதன் பின்னர் சகஜநிலை திரும்பும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கிமுல்லா மெசூதின் சொந்த இடமான கோட்கை நகரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளது தாலிபான்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.