இலங்கையில் இருந்து வெளியேறி அகதிகளாக வந்து இங்கிலாந்தில் தங்கியுள்ள தமிழர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்ப அந்நாடு முயற்சிக்கிறது என்று அங்கு வாழும் தமிழர்கள் கூறியுள்ளனர்.
‘இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என்று கூறும் இங்கிலாந்து அரசு அதிகாரிகள், தங்களை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அகதிகளாக அங்கு வாழும் தமிழர்கள் பிபிசி தொலைக்காட்சியின் சிங்கள மொழிச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளனர்.
ஒரு நேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த நடராஜா என்பவர் தனது தந்தை கொழும்புவில் கடத்தப்பட்டார் என்றும், அவருடைய நிலை என்னவென்று தெரியாத நிலை இன்றுவரை நீடித்து வருகிறது என்றும், ஏற்கனவே அந்நாட்டு காவல் துறையால் பிடித்துச் செல்லப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டத் தன்னையும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற இங்கிலாந்து அதிகாரிகள் விடாமல் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே 50க்கும் அதிகமானோரை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ள இங்கிலாந்து குடியேற்ற அதிகாரிகள், மேலும் பலரை அனுப்ப முயற்சிக்கின்றனர் என்றும், அவர்களிடம் சிக்காமல் பலர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கும் தவராணி நகுலேந்திரன் என்பவர் கூறியுள்ளார்.
“இலங்கையில் போர் முடிந்துவிட்டாலும் அங்கு நிலவும் மனித உரிமை நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அங்கு இயல்பு நிலை திரும்பும் வரை தமிழ் அகதிகளை அந்நாட்டிற்கு திரும்ப அனுப்ப வேண்டாம்” என்று கடந்த ஜூலையில் ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பின் உயர் ஆணையர் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி, வன்னியில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும் அவ்வமைப்பு கூறியுள்ள நிலையிலும், அங்கு சகஜ நிலை திரும்பிவிட்டதாக இங்கிலாந்து அரசு வற்புறுத்துவது அதன் இரட்டை வேடத்தையே காட்டுகிறது என்று தமிழர்கள் கூறியுள்ளனர்.
ஒரு பக்கத்தில் மனித உரிமை மீறல்களுக்காகவும், போர்க் குற்றத்திற்காகவும் சிறிலங்க அரசு மீது குற்றம் சுமத்தும் இங்கிலாந்து அரசு, மறுபுறம் அகதிகளை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டுவது தமிழர்கள் இடையே அந்நாட்டு அரசு மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.